தவெக மீது அவதூறு பரப்பி அரசியல் செய்கின்றனர் – விஜய் கண்டனம்

றிவுத் திருவிழா என்ற பெயரில் தவெக மீது அவதூறு பரப்பி திமுக அரசியல் செய்வதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘அறிவுத் திருவிழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தவெக தலைவர் விஜயை மறைமுகமாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

 

இந்த நிலையில் தான் திமுகவை விமர்சித்து விஜய் தரப்பில் நீண்ட நெடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது.

 

எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது. அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு.

 

இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர்.

 

 

உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம். நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர்.

 

அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்கிற அதிகார மயக்க முழக்கம்.53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறுகிறார்கள்.

 

நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது. எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.