ககன்யான் திட்ட பாராசூட் சோதனை ஜான்சியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான முக்கிய பாராசூட் சோதனை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. நவம்பர் 3 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சி பகுதியில் இந்த சோதனையை நடத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்கலத்தின் ஒரு பகுதி பூமிக்கு திரும்பும் போது இரண்டு பாராசூட் பயன்படுத்தப்படும். அப்போது ஒரு பாராசூட் திறக்க சற்று தாமதமானாலும் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்குமா என்பதை பார்க்க சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய விமானப்படையின் ஐஎல் 76 விமானத்தில் இருந்து இழுவைக்காக ஒரு பாராசூட்டுடன் பிரதானமான இரண்டு பாராசூட்கள் மற்றும் விண்கலன் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து தரை இறக்கப்பட்டன.சிறிது நேரத்தில் முதல் பாராசூட் முழுமையாக திறந்த நிலையில், மற்றொரு பாராசூட் சில விநாடிகள் தாமதமாக முழுமையாக திறந்தது.
இந்த சோதனையில் விண்கலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ககன்யான் திட்டத்தின் கீழ் 2027ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளளது.






