தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் : அமித்ஷா
உதயநிதி முதல்வராக வர முடியாது எனக் கூறிய மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
அந்த வகையில், பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜக நிர்வாகிகள் ஆளுயரத் தாமரை மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து, மறைந்த இல. கணேசன் படத்துக்கு அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மேடையில் பேசிய அமித் ஷா, பிரதமர் மோடி குறள் வழி நின்று ஆட்சி நடத்தி வருவதாகத் தெரிவித்தார். செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியின் ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், உதயநிதியை முதல்வராக்குவதுதான் ஸ்டாலினின் ஒரே நோக்கம் எனச் சாடினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 39 சதவீத வாக்குகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும் அமித் ஷா உறுதிபடக் கூறினார். திமுகவை வேரோடு பிடுங்கி எறியுங்கள் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய அமித் ஷா, தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சிதான் என்றார்.
அதேநேரம், எடப்பாடி பழனிசாமியின் பெயரை அவர் குறிப்பிடாமல் பேசியது அரசியல் தளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், தனியாக நின்றால் பாஜகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது என அமித் ஷாவுக்கு, திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். வரும் தேர்தலில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் டி.கே.எஸ். இளங்கோவன் சந்தேகம் எழுப்பினார்.
ராகுல் காந்தி பிரதமராக முடியாது என்ற கருத்தின் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படையை அமித் ஷா அவமதிப்பதாகக் கூறுகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. பாஜகவின் தோல்வி பயத்தை அமித் ஷா வெளிப்படுத்தி இருப்பதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




