--- --:--:-- --

பிடிபட்டான் காமக்கொடூரன்! 10 சிறுமி பலாத்கார வழக்கில் பிடிபட்டது எப்படி? என்கவுன்ட்டர் செய்ய திட்டமிடுகிறதா போலீஸ்..?

nm.n.n

திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 14 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை போலீசார் என் கவுன்ட்டர் செய்துவிடும் வாய்ப்பு உள்ளதாக அஞ்சும் உறவினர்கள், சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தமிழகத்தை உலுக்கிய வன்கொடுமை !

 

திருவள்ளூர் மாவட்டம், ஆரப்பாக்கம் ரயில்வே நிலையம் பகுதி, கடந்த ஜூலை 12ஆம் தேதி மதியம் 2 மணியளவில், பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 8 வயது சிறுமி ஒருவர் மர்மநபர் ஒருவரால் பின்தொடரப்பட்டு, வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, தாக்கி, கொடுமைப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.

 

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனினும் முதலில் காவல்துறையினர் இதை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதிலும் அலைக்கழிக்கப்பட்டதாக, உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

மெத்தனமாக செயல்பட்டதா போலீஸ்?

முதலில் சிறுமியை சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கிருந்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கும், அதன் பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லுமாறு அலைக்கழித்ததாக உறவினர்கள் அதிருப்தியுடன் தெரிவித்தனர்.

 

சிறுமி விவகாரத்தில் பல நாட்களாகியும் குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்காதது பெரும் விமர்சனங்களை முன்வைத்தன. ஊடகங்களில் சிசிடிவி காட்சிகள் அடிக்கடி ஒளிபரப்பாகி கேள்விகள் எழுப்ப, காவல் துறையினர் தங்கள் தூக்கத்தை கலைத்து, சோம்பல் முறித்து எழுந்தனர்.

 

திருவள்ளூர் எஸ்.பி. விவேகானந்தா சுக்லா தலைமையில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க 17 தனிப்படைகள் மற்றும் 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஆந்திர மாநிலத்தின் சூலூர்பேட்டை ரயில் நிலையப் பகுதிகள், ஸ்ரீசிட்டி ஆகிய இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் நபருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் காவல்துறையின் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

 

விசாரணையில் முன்னேற்றம் இல்லை

 

சந்தேகத்தின் அடிப்படையில், 20 பேரை விசாரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாதது போலீசாருக்கு பெரும் தலைவலியானது. இதனிடையே, சூலூர்பேட்டை ரயில் நிலையப் பகுதிகளில் காவல்துறையினர் மப்டி உடையில் கண்காணிப்பை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சிசிடிவி காட்சியில் இடம் பெற்றிருந்த நபரைப் போல் இருந்த ஒருவர் ரயிலில் அமர்ந்து செல்வதைக் கண்டறிந்தனர்.

 

அந்த நபரை, சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து, சந்தேக நபரை ஜூலை 25 அன்று மடக்கினர். சம்பவத்தன்று அணிந்திருந்த அதே ஆடையுடன் பிடிபட்ட நபர் திரிந்து கொண்டிருந்தார். 14 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தேடப்பட்ட நபர் சிக்கினார். சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி தானா என்பதை உறுதி செய்ய, போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். இதில், சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தேடப்பட்ட நபர் சிக்கியது எப்படி?

 

வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அளித்த பேட்டியில், “கைது செய்யப்பட்டுள்ள நபரின் அடையாளங்கள் தேடப்பட்ட நபருடன் முழுமையாகப் பொருந்திப் போகின்றன. பிடிபட்ட நபர், தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள தாபா ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். குற்றம் நடந்த நேரத்தில், அந்த நபருக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் இந்தியில் பேசியதாக சிறுமி தெரிவித்திருந்தார்.

 

அதன் அடிப்படையில், செல்போன் சிக்னல்கள் தீவிரமாக ஆராயப்பட்டன. சிசிடிவி காட்சியில் பதிவான அதே ஆடையை அணிந்துகொண்டு அந்த நபர் தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் உள்ள தாபா ஒன்றில் பணியாற்றுவதாகத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து கண்காணித்து, சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளோம்” என்றார்.

 

உறவினர்கள் முற்றுகை போராட்டம்

 

தேடப்பட்ட நபர் சிக்கினாலும், போலீசாருக்கு இன்னமும் தலைவலி தீரவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. பிடிபட்ட நபரின் விவகாரத்தில் பல சந்தேகங்களை அவர்கள் கிளப்பி, காவல் நிலையத்தை இரவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

“பாதிக்கப்பட்ட நபரின் புகைப்படத்தை எங்களிடம் காவல்துறையினர் ஏன் காட்டவில்லை?” என்று கேள்வி எழுப்பும் ஆரப்பாக்கம்வாசிகள் சிலர், “யாரையாவது பிடித்து அவரை என்கவுன்ட்டர் செய்து, வழக்கை முடிக்க திட்டம் போட்டுள்ளார்களா?” என்று யூகங்களை கிளப்பியுள்ளனர்.

 

இதை காவல் துறை மறுத்துள்ளது. விசாரணையைப் பாதிக்கும் என்பதால்தான் குற்றவாளி குறித்த முழு விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்றும், உரிய நேரத்தில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முழு நீதி கிடைக்க வேண்டும். அந்த சிறுமியை சீரழித்த காமக்கொடூரனை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதே, அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon