திருப்பூர் ரிதன்யா வழக்கில் ஐ.ஜி.யிடம் தந்தை பகீர் புகார்..!
திருமணமான 78-ஆவது நாளிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது… தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து கைகாட்டிபுதுரைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா. அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமார் என்பவருக்கும், ரிதன்யாவுக்கும் இடையே கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று இரண்டரை மாதங்களே ஆன நிலையில் கடந்த 28 ஆம் தேதி, ரிதன்யா வாட்ஸ்-அப்பில் ஆடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதில், தனது விபரீத முடிவுக்கு கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரே காரணம் என கூறியிருந்தார்.அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சேவூர் போலீஸார் பெண்ணின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவியை கைது செய்தனர். மேலும், தனது மகள் ரிதன்யாவை, கணவர் குடும்பத்தினர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக பெற்றோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால், தங்களது புகாரின் பேரில் போலீஸார் உரிய வழக்குகளை பதிவு செய்யவில்லை என குற்றம் சாட்டியிருந்தனர்.இந்த நிலையில், விசாரணை தொய்வடைந்ததாக கூறி, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாரிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அதில், தனது மகள் ரிதன்யாவை, அவரது கணவர் கவின்குமார் தொடர்ந்து உடல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜூன் 25 ஆம் தேதி தங்களது வீட்டிற்கு வந்த மகளை, கணவர் குடும்பத்தினர் அழைத்த போது அவர் அங்கு செல்ல மறுத்ததாக தெரிவித்துள்ளார். அதுகுறித்து தனது மகளிடம் கேட்டதற்கு, கவின்குமார் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வருவதாக கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
ரிதன்யா தற்கொலை வழக்கில் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற சட்டப் பிரிவுகளிலும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக அவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




