தமிழ்நாட்டில் முதல்முறையாக மின்சார அரசுப் பேருந்து சேவை இன்று தொடக்கம்..!
சென்னையில் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். எரிபொருள் செலவைக் குறைக்கவும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, உலக வங்கியின் உதவியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தில் ஆயிரத்து 225 மின்சார பேருந்துகள் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக 625 பேருந்துகளுக்கான ஒப்பந்தம் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஓம் குளோபல் மொபிலிட்டி’ நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ளது.
இந்த 625 பேருந்துகளில் முதற்கட்டமாக 120 தாழ்தள மின்சார பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வியாசர்பாடி பணிமனையில் இருந்து தொடங்கி வைக்கிறார். இந்த பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி 7 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.சீட் பெல்ட், அவசர கால பொத்தான்கள், சார்ஜின் பாய்ண்டுகள், அறிவிப்புகள் வெளியிடுவதற்கான ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட வசதிகள் இந்த பேருந்துகளில் அமைந்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




