நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த 4 கோரிக்கைகள்..!

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைத்த கோரிக்கைகள் தொடர்பாக பேசியுள்ளார். திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் 10 ஆவது கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.

 

இதில், அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில், 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசின் பங்கு குறித்து நிதிஆயோக் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, மாநில முதல்வர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.அதன்படி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் தான் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “மத்திய வரியில் மாநிலங்களுக்கு 50% ஒதுக்கீடு தர வேண்டுமென நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மேலும், மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41% வரிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை. தற்போது 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் என்றும் இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள் என கோரிக்கை விடுத்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம் என்று வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை என்றும் இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை வைத்ததாக தெரிவித்திருக்கிறார்.