அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி?

தயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? என்பது குறித்து தான் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் சத்யராஜ் நடித்துள்ள ‘தோழர் சேகுவேரா’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தவாக தலைவர் வேல்முருகன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், புரட்சித் தமிழன் என்ற பட்டம் வேறு எங்கோ போய் விட்டதாக நகைச்சுவையாக பேசினார்.

 

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி என்பது திமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும் அதில் தான் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.துணை முதலமைச்சர் பதவி குறித்து, முதலமைச்சருக்கு அனைத்து அமைச்சர்களும் துணையாக தான் உள்ளோம் என்றும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பாரா என்ற கேள்விக்கு ‘வலுத்துள்ளது. ஆனால் பழுக்கவில்லை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்திருந்தனர்.

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி துணை முதலமைச்சர் ஆவார் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பனும், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் ஆக தகுதி உள்ளதென்று அமைச்சர் ஐ.பெரியசாமியும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.