--- --:--:-- --

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

1

கோவையில் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்கி கலவரம் செய்ய பாஜகவினர் திட்டமிடுகிறார்களோ என்று சந்தேகம் எழுவதாக திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் குற்றம்சாட்டினார். இதனிடையே, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கோயம்புத்தூர் ஆவாரம்பாளையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விதிகளை மீறி வியாழனன்று இரவு 10.40 மணி வரை பரப்புரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து காவலர்களிடம் முறையிட்ட திமுகவினரை, பாஜகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, கோவை பீளமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக், அண்ணாமலை தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

 

அவரை தொடர்ந்து பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பாஜகவினர் தோல்வி பயத்தில் தொடர்ந்து இடையூறு செய்வதாக விமர்சித்தார். வெளி மாநிலங்களில் இருந்து ரவுடிகளை இறக்கியுள்ள பாஜக, கோவையில் கலவரத்தை தூண்ட திட்டமிட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். வீடியோ ஆதாரத்துடன் அண்ணாமலை மீது திமுக புகார் அளித்திருப்பதாகவும் கூறினார். விதிமீறலில் ஈடுபடும் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

இதனையடுத்து, ஆவாரம்பாளையம் பகுதியில் பரப்புரையின் போது திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய நால்வர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. திமுகவை சேர்ந்த குணசேகரன் என்பவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் பாஜகவை சேர்ந்த ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகிய 4பேர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அநாகரீகமாக வசைபாடுதல் , காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதே போன்று, கோவை ஆவாரம்பாளையத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பரப்புரையில் ஈடுபட்டதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon