--- --:--:-- --

உருவாகிறது புது கூட்டணி..? திருமாவுடன் போனில் பேசிய எடப்பாடி…திமுகவுக்கு `செக்’ வைக்க விசிக திட்டம்?

5.1

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் உடல்நலம் குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

 

வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பணிகளை பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. திமுக, தனது பூத் ஏஜெண்டுகள் கூட்டத்தை மண்டலம் வாரியாக நடத்தி வருகிறது.

 

இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழகத்தில் பாஜகவுடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டது. இது தேரிய அளவில் அரசியல் களத்தில் பரபரப்பையும், பல்வேறு யூகங்களையும் கிளப்பி விட்டிருக்கிறது. ஏற்கனவே, பெரியண்ணன் போக்கில் நடந்து கொள்வதாக திமுக மீது விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் முணுமுணுத்து வரும் வேளையில், பாஜகவை அதிமுக கழற்றி விட்டிருப்பது, திமுக அணியில் உள்ள அந்த கட்சிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை… தோழமை, கூட்டணி பாசம் என்று என்னதான் திமுக பேசினாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் தொகுதி எண்ணிக்கையைக் கிள்ளித் தான் தரும், அள்ளித் தராது என்பது காலம் காலமாக இருக்கும் குற்றச்சாட்டு. எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக குறைந்த எண்ணிக்கையில் சீட் வழங்க முன்வரும்.

 

இதுவரை பாஜக இருந்ததால் அதிமுக பக்கம் நெருக்கம் காட்டாத விசிக, இனி அதிமுகவுடன் கைகோர்க்க எந்த தயக்கமும் இருக்காது. எனவே, இதை சாக்காக வைத்து, சீட் குறைத்துக் கொடுத்தால் இனி அதிமுக பக்கம் திரும்ப நேரிடும் என்று எச்சரித்து, செக் வைக்க திமுக அணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

அதேநேரம், பாஜக இல்லாத சூழலில் தனது அணியை வலுப்படுத்த விரும்பும் அதிமுக, தற்போது விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் நெருக்கத்தைக் காட்ட விரும்புகிறது. அப்போதுதான் திமுக அணியை பலவீனப்படுத்த முடியும் என்பது அதிமுக போடும் கணக்கு.

 

இத்தகைய சூழ்நிலையில் தான், காய்ச்சல் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். உடல் நலம் குறித்து அக்கறையோடு விசாரித்தார். எடப்பாடியாரின் கனிவான பேச்சால் திருமாவளவன் நெகிழ்ந்து போய்விட்டாராம்.

 

அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் உடல் நலம் விசாரித்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், பாஜகவை புறந்தள்ளிவிட்டு கூட்டணியை வலுப்படுத்தும் முனைப்பில் உள்ள அதிமுக, திடீரென விசிகவுடன் நெருக்கம் காட்டுவது திமுக வட்டாரங்களில் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று விசிக விளக்கம் கொடுத்தாலும் தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு தொகுதி எண்ணிக்கை, ஒதுக்கீடு விஷயங்களில் பெரியண்ணன் போக்குடன் திமுக கெடுபிடி காட்டக்கூடும். அப்போது, `ரொம்ப கறாராக இருக்காதிங்க… நாங்க அதிமுக பக்கம் போயிடுவோம்’ என்று செக் வைக்க, விசிக-வுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

பாரளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். தமிழக அரசியல் களமும் அதற்கு விதிவிலக்கல்ல.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon