போலி பத்திரிகையாளர் சங்கங்களுக்கு கிடுக்கிப்பிடி:தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
போலி பத்திரிக்கையாளர்களை களைய, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய போது, தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததாகவும்,அதனை தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த சேகர் ராம் என்பவர், பத்திரிகையாளர் எனக்கூறி மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின் போது சேகர் ராம் போலி பத்திரிகையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் போலி பத்திரிக்கையாளர்களை களைஎடுப்பது தொடர்பாக விசாரணையை உயர்நீதிமன்றம் விரிவுபடுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் பிரஸ்கிளப் மற்றும் பத்திரிக்கையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், சாதி, மத, மொழி அடிப்படையில் பத்திரிக்கையாளர் சங்கங்களை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிக்கையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர, நேரடியாக வழங்க கூடாது எனவும் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




