சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு..!
சிவசங்கர் பாபாவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 16ஆம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த 19ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது சிவசங்கர் பாபா முழுமையாக குணமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார். சிவசங்கர் பாபாவுக்கு தலையில் சிறு கட்டி இருப்பதால் அதற்கு சிகிச்சை செய்வதற்காக மருத்துவ வசதி உள்ள புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






