கொரொனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் கடைசி ஆயுதம்..!
கொரொனா பரவலை கட்டுபடுத்த பொது முடக்கம் என்பதை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். தைரியம் மற்றும் அனுபவத்தை வைத்து ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள முடியும் எனவும் அவர் உரையாற்றியுள்ளார்.
இரண்டாவது முறையாக கொரொனா அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவசியமற்ற பணிகளுக்கு மக்கள் வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கொரொனா கட்டுபாடு மையங்களை அதிகரிப்பதன் மூலம் நாடு முழுவதும் முழு முடக்கம் வருவதைத் தடுக்க முடியும் எனவும் பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே பொது முடக்கத்தை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் மாநில அரசுகள் பொது முடக்கத்தை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்தாண்டு இருந்த மோசமான சூழ்நிலை தற்போது இல்லை என குறிப்பிட்ட அவர் முக கவசம் முதல் வெண்டிலேட்டர் வரை பெரிய அளவில் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்து இருப்பதாக தெரிவித்தார் .
தடுப்பூசி உற்பத்தியில் 50% மாநிலங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று பேசிய பிரதமர் அடுக்குமாடி குடியிருப்புகளில் குழு அமைத்து தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த உள்ளதாகவும் கூறினார்.
இதுவரை 12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதற்காக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிர்களை காக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் தெரிவித்தார். உலகத்திலேயே இந்தியாவில் தான் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு முகாம் உருவாக்கப்படும் எனவும் குறுகிய காலத்தில் அதிக அளவில் மருந்து உற்பத்தியை உறுதி செய்து இருக்கிறோம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
உற்பத்தியை மேலும் அதிகரிக்க மருந்து நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் முன் களப் பணியாளர்களுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் இணைத்தால் கொரொனாவை முறியடிக்க இயலும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.






