--- --:--:-- --

அமமுக -தேமுதிக கூட்டணி? இரு கட்சி நிர்வாகிகள் ரகசிய பேச்சுவார்த்தை!

vijayakanth ttv

அதிமுக கூட்டணியில் இருந்து நேற்று விலகிய தேமுதிக, தற்போது டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.

 

தொகுதிப் பங்கீடு எண்ணிக்கை தொடர்பான அதிருப்தியால், கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கழன்று கொண்டது. இன்று தான் தேமுதிக தொண்டர்களுக்கு தீபாவளி என்று, எல்.கே. சுதீஷ் கர்ஜித்தார். அதை தொடர்ந்து, திமுக பக்கம் சாயலாம் என்றால், அங்கு தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட எல்லாமே முடிந்து விட்டது.

 

அத்துடன், கடந்த கால கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு, வாக்கு வங்கி இல்லாத தேமுதிகவை சேர்த்துக் கொள்ள திமுக தலைமையும் தயாராக இல்லை. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் இணைந்து போட்டியிடலாம் என்றால், அந்த கட்சியை தேமுதிக 2ம் கட்ட தலைவர்கள் விமர்சனம் செய்து வந்துள்ளனர்.

 

எனவே, தேமுதிக முன்பு இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று, அமமுகவுடன் பேச்சு நடத்தி கூட்டணி அமைப்பது; அல்லது தனித்தே 234 தொகுதிகளிலும் களம் காண்பது என்பதுதான் அது. ஆனால், கடைசி நேரத்தில் தனித்துப் போட்டி என்பது மிகவும் ரிஸ்க் ஆனது என்பதை தேம்திக தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

 

வாக்கு வங்கி சொல்லிக்கொள்ளும்படி இல்லை; பொருளாதார ரீதியாக வேட்பாளர்களுக்கு செலவு செய்ய முடியாது. தனித்துப் போட்டியிட்டு கட்சியின் உண்மையை நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதைவிட, பணத்தை தண்ணீராக் செலவிடத் தயாராக இருக்கும் டிடிவி தினகரனின் பக்கம் சேரலாம் என்று தேமுதிக தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

அதன்படி, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அமமுக – தேமுதிக தலைவர்கள் ரகசியமாக பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், அமமுக சார்பில் பழனியப்பன், மாணிக்கராஜாவும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தேமுதிக -அமமுக பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா? அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்குமா என்பது, விரைவில் தெரியவரும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon