அனைவருக்கும் இலவச கல்வி! பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் ராமதாஸ் வெளியிட்டார். 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக தேர்தல் அறிக்கையை பாமக தலைவர் ராம்தாஸ் வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
தமிழகத்தில், 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவக்காப்பீடு வழங்கப்படும். 50 வயது கடந்த அனைவருக்கும் மருத்துவப்பரிசோதனை இலவசமாக நடத்தப்படும்.
வேளாண் தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தது ரூ.2500 ஊதியமாக வழங்கப்படும். 60 வயது கடந்த உழவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்படும். கூட்டுறவு வங்கி பயிர்க்கடனுக்கு 15% மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிர்வாக வசதிக்காக திருச்சியை 2வது தலைநகரமாகவும், மதுரையை 3வது தலை நகராகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்துறை தலைநகரமாக கோவை அறிவிக்கப்படும். தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.
தொழில் வளர்ச்சிக்காகத் தமிழகம் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் தனித்தனிப் பொருளாதார ஆணையரகங்களாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையராக நியமிக்கப்படுவார். மண்டல அளவில் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதுதான் இந்த ஆணையரகங்களின் பணிகளாகும்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துச் சென்னையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். கோவை மற்றும் திருப்பூரில் ஆடை சார்ந்த தொழில்களும், நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுலா சார்ந்த தொழில்களும் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 2 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான மகப்பேறு விடுப்புக்காலம் தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்படும்.
40 வயதைக் கடந்த அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என குடும்பத் தலைவிகள் விரும்பிய இடங்களில் இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்படும் முறையை மாற்றி, மாதத்திற்கு ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறை அறிமுகப் படுத்தப்படும்.
பத்திரிகையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசு சார்பில் ஊடகங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களின் மொத்த மதிப்பில் 3% பத்திரிகையாளர் நல நிதிக்கு வழங்கப்படும். இந்த நிதியைக் கொண்டு பத்திரிகையாளர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 167 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, 23 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




