--- --:--:-- --

பக்தர்களுக்கு தாராள மனசு: ராமர் கோவில் திருப்பணிக்கு ரூ.2,100 கோடி நன்கொடை!

ramar temple

அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.2,100 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரஅறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இங்கு கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்படி, 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கோயில் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இக்கோயில் கட்டுவதற்காக நிதி திரட்ட, அறக்கட்டளை அமைத்து பணி நடைபெற்றது.

 

அயோத்தி ராமர் கோயில் கட்டும் திருப்பணிக்கு நன்கொடை திரட்டும் பணிகள், ஜனவரி 15-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 27 வரை நடைபெற்றது. முதல் நபராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். அதை தொடர்ந்து, நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 40 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு மாநிலங்களில் நகரங்கள், கிராமங்களில் வீடு, வீடாக நேரில் சென்று நிதி வசூல் செய்தனர்.

 

இப்பணியானது, கடந்த பிப்ரவரி 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த நன்கொடை பெறும் பணி முடிந்த நிலையில், 2,100 கோடி ரூபாய் நிதி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

 

அறக்கட்டளையை சேர்ந்த கோவிந்த் தேவ் கிரி கூறுகையில், ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1,100 கோடி அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டிருந்தோம். எனினும், எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகஅளவு நிதி தந்துள்ளனர். நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக ரூ.1,000 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. கோயில் ரூ.400 கோடி செலவிலும், கோயில் வளாகம் ரூ.700 கோடி செலவிலும் அமைக்கப்படும். கோயில் வளாகத்தை கட்டி முடிக்க மொத்தம் ரூ.1,100 கோடி செலவாகும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon