மூன்று ரஃபேல் போர் விமானங்கள் நேற்று இரவு இந்தியா வந்தடைந்தது..!
இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க 59 ஆயிரம் கோடி ரூபாயில் 2016ஆம் ஆண்டு முன்பதிவு செய்யப்பட்டது.
இதன் முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் இந்தியா வந்து சேர்ந்தன. இதன் இரண்டாவது பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்று விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்தடைந்தன.
இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் நேற்று இரவு இந்தியா வந்தடைந்தது. சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இடைநில்லாமல் வந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் எம்ஆர்டிடி எனப்படும் நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானம் எரிபொருளை விமானங்களுக்கு வழங்கியது.
பிரான்சில் உள்ள விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான தளத்தில் பாதுகாப்பாக வந்து இறங்கியதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமான படை விடுத்திருக்கும் அறிக்கையில் ரஃபேல் விமானங்கள், இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலத்தை சேர்க்கின்றனர் என்றும் அற்புதமான இந்த விமானிகள் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து சுகோய் ரக விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டு கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மேற்கொள்ளும் மிகப்பெரிய போர் விமான வர்த்தகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.






