தனது 2 மகள்களையும் நரபலி கொடுத்த கொடூர பேராசிரியர்..!
சித்தூர் மாவட்டம் மதன பள்ளியை சேர்ந்த புருஷோத்தம நாயுடு பத்மஜா தம்பதியினர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். பேராசிரியர் தம்பதியினர் வழிபாடு, பூஜை ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
கல்வி, செல்வம், வீடு என எதிலும் குறைச்சல் இல்லாமல் இருந்தும் கூட மேலும் மேலும் கிடைக்க வேண்டும் என்ற பேராசையில் அற்புதங்கள் நடத்துவதாக கூறி சில மாதங்களாகவே இருவரும் அடிக்கடி வீட்டில் முழுவதும் பூஜைகள் மேற்கொண்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் சென்று கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால் போலீசாரை வரவழைத்துள்ளனர். அவர்களும் நீண்ட நேரமாக கதவை திறக்க கூறி வலியுறுத்தியும் திறக்கவில்லை.
ஒருகட்டத்தில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிலிருந்து இரண்டு மகள்களும் பூஜை அறையில் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்து சிதைவுற்று கொடூரமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நரபலி கொடுத்து பூஜை செய்தால் குடும்பத்தினருக்கு ஆயுள் கூடும். பல மடங்கு பலன் கிடைக்கும் என சாமியார் சொன்னதைக் கேட்டு இந்த கொடூரத்தை நிகழ்த்தியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. 2 மகள்களையும் உடற்பயிற்சி செய்யும் டம்பிள்ஸ் மூலம் அடித்துக் கொலை செய்ததாகவும் அந்த கொடூர பெற்றோர் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்தில் டிஎஸ்பி ரவி, மனோகர் ஆச்சாரி போலீசாருடன் ஆய்வு செய்துள்ளார். வாழ வேண்டிய இளம் பிள்ளைகளின் உயிரை பறித்து விட்டு ஒரு இரவு மட்டும் பொறுத்திருங்கள் கொல்லப்பட்ட இரு மகள்களும் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார்கள் என அந்தப் பேராசிரியர் பேசுவது கொடூரம் மற்றும் மூடநம்பிக்கையின் உச்சமாக பார்க்கப்படுகிறது.






