90 கிட்ஸ்கள் சந்திப்பு பருத்திப்பால், கூல் பகிர்ந்து நினைவு கூறிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு !
பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளமற்ற சிரிப்புடன் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்தபடி எதிர்காலச் சிந்தனை ஏதுமின்றி துள்ளிப் பறந்த பள்ளிப் பருவத்தின் நினைவுகளை அத்தனை எளிதில் யாராலும் கடந்து விட முடியாது.
அதனால் கால ஓட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றியபோதிலும் பழைய மாணவர்களின் சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அப்படியான அலாதியான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் பள்ளியில் பயின்ற 1985 முதல் 1991ம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்களும் மற்றும் அன்றைய காலகட்டத்தில் பணி செய்த ஆசிரியர்களும் அன்பை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை தனியார் மஹால் ஒன்றில் நடந்த இவ்விழாவில் முன்னாள் மாணவர்களின் குழந்தைகளும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் அன்பான ஆசிரியர்களுக்கு மனதை தொடும் வாசிப்பு புத்தகங்களையும் வழங்கினர்.
படித்து தாங்கள் முன்னேறியதற்கு ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் நிகழ்ச்சியில் 90 கிட்ஸ்க்கு பின் கைவிடப்பட்ட பானங்களாக போற்றப்படும் பருத்திப்பால், கூல் போன்ற பாரம்பரிய உணவுகளும் வழங்கி பகிர்ந்துகொண்டனர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அன்பை பெருக்கும் நிகழ்வாக இன்று மானாமதுரையில் அரங்கேறியுள்ளது அப்பகுதியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






