கோவை : பொள்ளாச்சி சம்பவத்தில் கைதான குற்றவாளிகளுக்கும், அதிமுக-வின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்கும் – உதயநிதி ஸ்டாலின் ட்வீட் !!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த  இந்த சம்பவத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ விசாரணையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதான 5 பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேரை நேற்று விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

 

வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்குவதால் 3 பேரிடமும் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் தருவதாக அமையும் என்று கூறப்படுகிறது. விசாரணை முடிவில் சிபிஐ 3 பேரை கைது செய்துள்ளனர்.

 

இதன்படி பொள்ளாச்சி வடுகபாளையம், கிருஷ்ணசாமி செட்டியார் மகன் அருளானந்தம் (34), பொள்ளாச்சி வடுகபாளையம் பழனிச்சாமி என்பவர் மகன் பாபு என்கிற பைக் பாபு (27), பொள்ளாச்சிி ஆச்சி பட்டி, ஏ.சங்கம்பாளையம், கற்பக விநாயகர் நகர், தங்கராஜ் என்பவர் மகன் ஹேரேன்பால் (29) உள்ளிட்ட மூன்று பேரையும் நள்ளிரவு விசாரணையின் முடிவில் சிபிஐ கைது செய்தனர்.இதில் அருளானந்தம் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் நீண்ட நாட்களுக்கு பிறகு 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது இந்த வழக்கை மேலும் பரபரப்பாகி உள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக மாணவரணி செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 பேர் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடப்பதின் அடிப்படையில் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.

 

இந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்த சிபிஐ வந்ததை அடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.கைது செய்யப்பட்ட மூவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டார் கோவை மகிளா கோர்ட் நீதிபதி.

 

மேலும்,திமுக,சிபிஐ,சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் பெண் நிர்வாகிகளும் நீதிமன்றம் முன்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விட்டு வைக்கக்கூடாது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.இதனால் கோவை நீதிமன்றம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவரணி நகர செயலாளர் அருளானந்தம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் -இபிஎஸ் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

மேலும்,3 பேர் கைது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் “பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட தப்பித்துவிடக் கூடாது!” என தெரிவித்துள்ளார்.மேலும்,பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்தவர் கைதாகி இருக்கிறார்.இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கு பாதையாக இருக்க வேண்டும். வேறு எதற்காகவும் பயன்பட்டுவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ பெண்களுக்கு அதிகாரம் அளித்தோம்’ என அரசுப்பணத்தில் அடிமைகள் விளம்பரம் செய்து கொண்டுள்ள இந்த நாளில் அதிமுக நகர மாணவரணி செயலாளர் உட்பட 3 பேர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளனர். வன்கொடுமை குற்றவாளிகளை பாதுகாப்பது தான் அதிகாரமளித்தலா ?

 

அதிமுகவின் பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு பொள்ளாச்சி வழக்கில் தொடர்புள்ளது என தலைவர் ஸ்டாலின் அன்றே சொன்னார். கைதான குற்றவாளிகளுக்கும் அதிமுக-வின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்கும்.

 

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.எது எப்படியோ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Leave a Reply