கோவை : ஆலாந்துறை அருகே இருட்டுப்பள்ளம் பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலியான விவகாரத்தில் திருட்டு மின்சாரத்தில் தோட்ட உரிமையாளர் யானையை கொன்றது அம்பலம் !!!

கோவை நரசிபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஆலாந்தறை, தொண்டாமுத்தூர், ஆனைகட்டி, கணுவாய் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் ஊருக்குள் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். தொடர்ந்து விவசாய நிலங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தி செல்கின்றன.

 

இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், வனச்சரகத்தில் உட்பட்ட ஆலந்துறை இருட்டுப்பள்ளம் பகுதியில் உள்ள குளத்து ஏரி பகுதியில் துரை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் காட்டு யானை ஒன்று அந்தப் பகுதியில் உணவுக்காக வந்தது.அப்போது, மின்வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்ட ஆண் யானை பரிதாபமாக இறந்தது.இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க அந்தப் பகுதி மக்கள் காட்டுப் பகுதிக்கு சென்றபோது யானை இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.

 

தொடர்ந்து தொண்டாமுத்தூர் வனச்சரகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஆண் யானையை பிரேத பரிசோதனைக்காக மருத்துவருக்குதகவல் தெரிவித்துள்ளனர்.மேலும்,மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும்,இதுகுறித்து விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்திருந்த துரையிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளின் தீவிர விசாரணையில் ​​பண்ணை வயலைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டிருப்பதும், வயர் மூலம் மின்சாரம் பிரதான கம்பத்தில் இருந்து திருடப்பட்டு இரும்பு கம்பி வேலிக்கு செலுத்தியது தெரியவந்தது.

 

மேலும்,பண்ணையின் உரிமையாளர் துரை நேற்றிரவு இரவு தனது தோட்டத்தில் காவலுக்கு இருந்ததாக அருகிலுள்ள தோட்டத்து உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், யானை வேலியில் இறந்தவுடன் உரிமையாளர் துரை இரும்பு கம்பி வேலிக்கு மின்சாரம் வழங்கிய வயர்களை அகற்றிவிட்டு தலமறைவாகியுள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தோட்ட உரிமையாளர் துரை மீது வன உயிரின வழக்கு WLOR எண் : 1/2021 அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
பிரேத பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.


Leave a Reply