--- --:--:-- --

நவம்பர் 16-ல் பள்ளிகளை திறப்பது சாத்தியமா? வரும் 9-ந் தேதி மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு!!

10

கொரோனா காரணமாக 8 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் 16-ந் தேதி 9 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பள்ளிகளை இப்போதைக்கு திறப்பதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

 

இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பள்ளிகளை திறப்பது தொடர்பாக வரும் 9-ந் தேதி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

 

இச்சூழ்நிலையில், பெற்றோர்களும், கல்வியாளர்களும் தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி, பள்ளிகளை விரைவில் திறப்பதற்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.பள்ளிகள் திறப்பது குறித்து, மத்திய அரசு அக்.30 ஆம் தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நவ.15 ஆம் தேதிக்குப் பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளிகளை மாநில அரசுகள் படிப்படியாக திறக்க அனுமதியளித்தது.

 

இருப்பினும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை, தொற்று நோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, வரும் நவ.16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் என அரசால் அறிவிக்கப்பட்டது.

 

வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விடுமுறைகள் வருவதைக் கருத்தில்கொண்டும், மாணவர்கள் பாடங்களை முழுவதுமாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவோ அல்லது இணையவழி வாயிலாகவோ கற்பது, மாணவர்களுக்கு முழுமையான நிறைவினை அளிக்காது என்பதையும், ஆசிரியர்கள் மூலமாக நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலமாகத்தான் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துக் கொண்டு கற்பதற்கும், தேர்வினை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அந்தந்த பள்ளி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதன் அடிப்படையிலேயே மாநிலத்தின் வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பள்ளிகள் திறப்பு குறித்து சில கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்கனவே பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இருந்தபோதிலும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற ஏதுவாக, வரும் நவம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் கோவிட் 19 முன்னெச்சரிகை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கருத்து கேட்பு கூட்டங்களில் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்து கொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பு குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon