பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை!! “மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட சம்பவமல்ல” சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் இல்லை என்றும், போதிய ஆதாரங்களும் இல்லை எனவும் கூறி 28 ஆண்டுகளுக்குப் பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
உ.பி.மாநிலம் மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 450 ஆண்டுகளுக்கும் மேலாக பழமைவாய்ந்த பாபர் மசூதி உள்ள இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக பல ஆண்டுகளாக சர்ச்சை எழுந்து வந்தது.
உ.பி.யில் பாஜகவின் கல்யாண் சிங் ஆட்சிக் காலத்தில் கரசேவகர்களால் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தால் நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டு பெருமளவில் மத மோதல்கள் வெடித்ததும் குறிப்பிடத்தக்கது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு 1993 முதல் வழக்குகள் நடைபெற்று வந்தன. 2001-ல் அத்வானி உள்ளிட்டோர் ரேபரேலி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு பின்னர் 2010 -ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்க 2017-ல், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் மீண்டும் தலையிட்டு இந்த வழக்கில் செப்டம்பர் 30-ல் (இன்று) தீர்ப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில், இந்த தீர்ப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ், பாபர் மசூதி வழக்கில், எல்.கே. அத்வானி, உமா பாரதி, ஜோஷி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை என கூறி 32 பேரையும் விடுவித்த நீதிபதி,
பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் அல்ல என்றும் தீர்ப்பளித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு நடைபெற்று 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் கடந்தாண்டு அந்த இடம் ராம ஜென்ம பூமிக்கு சொந்தம் எனவும், அங்கு ராமர் கோயில் கட்டலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






