--- --:--:-- --

முதல்வர் வேட்பாளர் விவகாரம் : ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை… முதல்வர் எடப்பாடி நிகழ்ச்சியையும் புறக்கணித்தார்!!

18

அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே மோதல் முற்றிய நிலையில், தனது ஆதரவாள்களுடன் ஓபிஎஸ் இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். மேலும் கொரோனா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பங்கேற்ற அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தையும் ஓபிஎஸ் புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுகவில் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டி உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக முடிவு செய்ய, பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் நேற்று அதிமுக செயற்குழு கூடியது. ஏறத்தாழ 5 மணி நேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இபிஎஸ்., – ஓபிஎஸ்., இடையே பகிரங்க மோதல் வெடித்தது.அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நீயா, நானா என்ற போட்டி எழுந்து இருவருக்குமிடையே நேரடியாக காரசார விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கட்சியினர் முன்னிலையில், இருவருக்கும் இடையே நடந்த காரசார வாக்குவாதம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். கடைசியில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்யாமலே செயற்குழு முடிவடைந்தது.

 

தொடர்ந்து இரு தரப்பையும், அதிமுக மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தியதை அடுத்து, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, அக்., 7-ந் தேதி அறிவிக்கப்படும் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். செயற்குழுவில் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்சை அறிவிக்க வேண்டும் என்றே அதிகம் பேர் குரல் கொடுத்தாலும், ஓபிஎஸ் தரப்பு அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக் கொடுக்காது என்றே இன்னமும் கூறப்படுகிறது. ஒரு வேளை ஆட்சிக்கு எடப்பாடி தலைமை என்றால் கட்சியில் அதிகாரம் முழுக்க தம் வசம் இருக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்சின் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

அக்டோபர் 7-ந் தேதிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தனது நிலைப்பாட்டில் ஓபிஎஸ் உறுதியாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இன்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை நடத்தியதும், இன்று காலை கொரோனா தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தையும் ஓபிஎஸ் புறக்கணித்ததும் அதிமுகவில் மோதல் மேலும் வலுக்கும் என்றே தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon