வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்..!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரொனா காலத்தில் விலை உயர்ந்த வெளிநாட்டு மோட்டார் சைக்கிளுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முக கவசம் இன்றி அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது.
அவதூறு பரப்பும் விதமாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடைபெற்றது.
ஆனால் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதை தொடர்ந்து இன்று தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
அபராத தொகையை ஒரு ரூபாயை செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்ற இடைக்கால தடை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






