--- --:--:-- --

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடி “இ-பாஸ்” வழங்கும் திட்டம் அமல்..! பல்வேறு தரப்பிலும் ஏக வரவேற்பு!!

13

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற திட்டத்தில் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பிக்கும் அனைவக்கும் உடனடியாக இ – பாஸ் வழங்கும் இத்திட்டத்தால் பலரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் அமலில் உள்ளது. அடுத்தடுத்து 7 கட்டமாக நீட்டிக்கப்பட்டு இம்மாதம் 31-ந் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 

ஆனால் பொதுப் போக்குவரத்து மட்டும் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றாலும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் அவசர மருத்துவ சிகிச்சை, திருமணம், இறப்பு போன்ற காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் என்று கெடுபிடி காட்டப்பட்டாலும், இந்த உண்மையான காரணங்களுக்கு கூட இ-பாஸ் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. மேலும் இ-பாஸ் வழங்குவதிலும் போலிகள் அதிகரித்து, லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கப்படுவதாக ஏராளமான புகார்கள் குவிந்தன.

 

மேலும், வியாபாரம் மற்றும் பணி நிமித்தமாக வெளி மாவட்டம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள பலரும் இந்த இ-பாஸ் நடைமுறையால் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர், இதனால் மத்திய அரசே இ-பாஸ் தேவையில்லை என அறிவித்துள்ள நடைமுறையை பின்பற்றி தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தது. பொதுமக்கள், வியாபாரிகள், பணிக்கு செல்வோர், அரசியல் கட்சிகள் என பல தரப்பிலும் இக்கோரிக்கைகள் எழுந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு .

 

கடந்த 14-ந் தேதி இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்குமாறும், அனாவசிய பயணங்களை தவிர்க்குமாறும் முதல்வர் எடப்பாடி வேண்டுகோள் விடுத்தார்.

 

அதன்படி, உடனடி இ – பாஸ் வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆதார், ரேசன் கார்டு விவரங்கள், மொபைல் எண்களை குறிப்பிட்டு விண்ணப்பித்தால் உடனடியாக இ – பாஸ் வழங்கப்படும் இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் அமோக வரவேற்பு எழுந்துள்ளது. மேலும் படிப்படியாக பேருந்து போக்குவரத்தையும் தொடங்க வேண்டும் என்பதும் அனைவரின் கோரிக்கையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon