--- --:--:-- --

கோழிக்கோடு விமான விபத்து ஏன்? மோசமான வானிலை..! வேறு வழியில்லை…! பயணிகளை காப்பாற்ற துணிச்சலாக செயல்பட்டு உயிரிழந்த விமானி!!

images

கோழிக்கோடு விமான விபத்தில் பெரும் உயிர்ச்சேதத்தை தவிர்க்க விமானி சாதுர்யமாக செயல்பட்டதாக தெரிய வந்துள்ளது.

 

மோசமான வானிலையால் 2 முறை தரை இறங்க முயன்றும் முடியவில்லை. கடைசியில் விபத்து நடந்தாலும் தீப்பிடித்து விடக் கூடாது என சாதுர்யமாக விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானி தனது உயிரையும் தியாகம் செய்துள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

 

தென் மேற்கு பருவ மழைக் காலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கேரள மாநிலம் பேரழிவை சந்தித்து வருவது வழக்கமாகி விட்டது. கனமழையால் பெரு வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் கேரளா இந்தக் காலத்தில் பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.இந்த ஆண்டும் அதே போன்ற சோகம் தொடர்கிறது.

 

மற்றவர்களின் கதி?

வெளுத்து வாங்கும் கன மழையால் வயநாடு மலப்புரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இடுக்கி மாவட்டத்திலோ பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கதிகலங்க வைத்துள்ளது. நேற்று அதிகாலை மூணாறு அருகே தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதி ஒன்றை நிலச்சரிவு அப்படியே கபளீகரம் செய்து வீடுகள் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டது. 80-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணோடு மண்ணாக புதையுண்டதில் 17 பேர் சடலமாகவும், 15 பேர் உயிருடனும் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களின் கதி என்னவாயிற்று? என்று கலங்கடித்துள்ளது. தொடர்ந்து பெய்யும் கன மழையால் மீட்புப் பணிகள் பெரும் சவாலாக உள்ளது.

 

இந்தியர்களை மீட்டு வந்த விமானம்

இந்நிலையில் கேரளாவில் நேற்றிரவு ஏற்பட்ட மேலும் ஒரு சோக விமான விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கிக் கிடக்க, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அரபு நாடுகளில் தத்தளித்த இந்தியர்களை மீட்டு வந்த விமானம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான சம்பவம் தான் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம், தரை இறங்கும் போது ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து இரு துண்டாக பிளந்தது.இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்பதே முதற்கட்டமாக வந்த தகவல் . பலத்த மழை, 20 அடி பள்ளத்தில் விமானம் 2 துண்டாகி கிடந்த நிலையில் மீட்புப் பணியில் முதலில் தொய்வு ஏற்பட்டாலும், பேரிடர் மீட்பு, தீயணைப்பு, சிஐஎஸ்எப் படையினர் விரைந்து துரிதமாக செயல்பட்டனர்.

“19 பேர் உயிரிழப்பு”

அப்போதுதான் தெரிந்தது உடைந்த விமானத்திற்குள் பயணிகள் பலரும் படுகாயங்களுடன் சிதறிக் கிடந்துள்ளனர். இதில் விமானிகள் இருவர் உட்பட சிலர் உயிரிழந்த நிலையிலும் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியில் 3 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்த நிலையில், 150 பேர் வரை காயமடைந்து, அதில் 10 பேரின் நிலைமை சீரியஸ் என கூறப்பட்டுள்ளது.

கிடு கிடு பள்ளங்கள்

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி பரபரப்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. கோழிக்கோடு விமான நிலையம் அமைந்துள்ள பகுதி மேடு பள்ளங்கள் நிறைந்த உயரமான இடமாகும். இங்கு அமைக்கப்பட்டுள்ள விமான ஓடுதளமும் டேபிள் டாப் என்ற வகை ஓடுதளமாகும். ஓடுதளத்தில் ஆரம்பம் மற்றும் முடிவுப் பகுதிகளில் கிடு கிடு பள்ளங்கள் அமைந்துள்ளன. இந்த ஓடுதளத்தில் விமானத்தை இறக்குவது சவாலானது. மிக்க அனுபவமிக்க விமானிகளே இப்படிப்பட்ட இடங்களில் விமானத்தை இயக்குவது வழக்கம்.

“விருது பெற்ற விமானி தீபக் சாத்தே”

நேற்று விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கி வந்த விமானி தீபக் சாத்தே, இந்திய விமானப் படையில் 22 ஆண்டுகள் பணியாற்றி, சிறந்த விமானி என்ற விருதும் பெற்றவர். 2003-ல் விமானப் படையில் ஓய்வு பெற்ற பின் கடந்த 17 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் பணியாற்றி வருகிறார். 59 வயதான சாத்தே, 39 வருடங்கள் விமான ஓட்டியாக மிக மிக அனுபவம் வாய்ந்தவர்.

 

தரையிறக்குவதில் சிரமம்

நேற்று இரவு கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை . கன மழை மற்றும் இரவு நேரம் என்பதால் விமானத்தை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல் முறை தரையிறக்கும் முயற்சி தோல்வியடைய விமானி சாத்தே வானிலேயே வட்டமடித்துள்ளார்.

 

தீப்பிடிக்கும் ஆபத்து

பின்னர் மீண்டும் தரையிறக்க முயற்சிக்கும் முன், விமானத்தில் உள்ள பயணிகளிடம் பேசிய சாத்தே, தரையறக்குவது சவாலாக உள்ளது ஆனாலும் தைரியமாக இருங்கள்; பத்திரமாக தரையாக்கி விடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் விமானம் ஓடுதளத்தில் வேகமாக இறங்கிய நிலையில், மழை நீர் காரணமாக வழுக்கிச் சென்றதையறிந்த விமானி, விமானத்தை சடனாக நிறுத்தினால் தீப்பிடிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தே, சமயோசிதமாக ஓடுதளத்தின் கடைசி வரை ஓடச் செய்து சுவரிலும் மோதச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

“பைலட்கள் இருவரும் முதல் பலி…”

வேகம் குறைந்த நிலையில் விமானம் சுவரில் மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டாலும் முன் பகுதி சேதமடைந்து பைலட்கள் இருவரும் முதல் பலி ஆகியுள்ளனர். அதிர்வில் விமானம் இரண்டு துண்டான் நிலையில் உள்ளே இருந்த பயணிகளும் பலத்த காயம் பட்டு அதில் 19 பேர் வரை உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

இந்த விமான விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.மோசமான வானிலை காரணமாக முதலில் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுத்ததே தவறு என்று கூறப்படுகிறது.


உயிர்த்தியாகம் செய்த விமானி

அதே வேளையில் துணிச்சலாக விமானத்தை தரையறக்கிய விமானி சாத்தே, ஓடுபாதையில் விமானம் தாறுமாறாக வழுக்கிச் செல்வதையறிந்து சமயோசிதமாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. பதற்றப்பட்டு விமானத்தை அவசரமாக நிறுத்த முயன்றிருந்தால் விமானம் வெடித்து தீப்பற்றி பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்பதாலேயே தன் உயிர் போனாலும் பரவாயில்லை என விமானத்தை ஒடுபாதையின் கடைசி வரை ஓடச் செய்து சுவற்றில் லேசாக மோத விட்டு உயிர்த்தியாகம் செய்து பல பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளதாக உயிர்தப்பிய பயணி ஒருவரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon