ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரிக்கை..!

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டங்கள் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

 

பொது முடக்க காலத்தில் ஊருக்கு வெளியே உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தன் மீதும் நண்பர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த நபர் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி தற்போது ஆன்லைன் சீட்டு விளையாட்டு போல பணத்தை மையமாக வைத்து நடைபெறும் விளையாட்டுகளால் பணம் சூறையாடப்படுகிறது என்றும், இது பலரையும் குறிப்பாக வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும் சிந்திக்கும் திறனையும் குறைப்பதாகவும் தெரிவித்தார்.

 

தெலுங்கானாவில் ஆன்லைனில் சீட்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி 2003 ஆம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டதே போலவே மத்திய, மாநில அரசுகள் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை நாடு முழுவதும் தடை செய்வதற்கு உரிய சட்டங்கள் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.


Leave a Reply