உத்திரபிரதேச மாநிலத்தில் ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் சில வாரங்களுக்கு முன்பு காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்டர் என கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக தனியாக விசாரணை குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. உத்தரபிரதேச அரசு சார்பில் ஏற்கனவே இது தொடர்பான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருந்தாலும் அதில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை சேர்க்க திட்டம் ஏதும் உள்ளதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த சூழலில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் சவுகான் தலைமையிலான குழு என்கவுண்டர் குறித்து விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த குழு ஒரு வாரத்திற்குள் விசாரணை தொடங்கும் என்றும் மூன்று மாதங்களுக்குள் அதன் அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.