கொரோனாவை ஒழிக்க பொது முடக்கம் தேவையற்றது எனவும் கர்நாடகா முழுவதும் நாளை முதல் ஊரடங்கு அடியோடு ரத்து செய்யப்படுவதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் ஆரம்ப கட்டத்தில் மிகவும் குறைவாகவே இருந்தது. கடந்த ஜூன் மாதம் 17ந் தேதி வரை அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பே 4 ஆயிரம் வரை தான் இருந்தது. அதிலும் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னைக்கு அடுத்து மிகப்பெரும் மெட்ரோபாலிடன் சிட்டியான கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மாநகரில் தொற்று பாதிப்பு மிக மிக குறைவாகவே இருந்தது. பிற மெட்ரோ நகரங்களில் தினசரி பாதிப்பு ஆயிரக்கணக்கில் இருக்க, பெங்களூரு நகரில் பாதிப்பு குறைவு என்பதை அனைவரும் ஆச்சர்யமாகவே பார்த்தனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், கர்நாடகாவில் கடந்த ஜுன் 17-ந் தேதி முதல் பெரும் தளர்வுகளை அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். இந்த தளர்வுகளுக்குப் பின் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர ஆரம்பித்தது. குறிப்பாக பெங்களூரு நகரில் கட்டுக்கடங்காமல் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.
இதனால் ஒரே மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை 71 ஆயிரமாக அதிகரித்து அனைவரையும் திகிலில் உறைய வைத்தது. இதற்கு காரணம் ஊரடங்கில் தளர்வை அறிவித்தது தான் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.இதனால் வேறு வழியின்றி கடந்த 14-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு பெங்களூரு நகரில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என அறிவித்து கடும் கட்டுப்பாடுகளையும் எடியூரப்பா விதித்தார்.
மாநிலம் முழுவதும் ஊரடங்கு அடியோடு ரத்து..!
இந்நிலையில் நாளை காலையுடன் பெங்களூரு நகரில் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று அம்மாநில மக்களிடையே உரை நிகழ்த்திய போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
கர்நாடகத்தில் நாளை முதல் எந்தவிதமான ஊரடங்கும் கிடையாது. பொருளாதாரம் மிகவும் முக்கியம் என்பதால் மக்கள் பணிக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சீரான பொருளாதாரத்தை நிலைநாட்டிக் கொண்டே, கொரோனாவுக்கு எதிரான போரைத் தொடருவோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் தேவை. இதில் எந்த ஊழலுக்கும் இடமில்லை. கொரோனா ஒழிப்புக்காக கொள்முதல் செய்யப்படும் உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்திலும் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவோம். இதில் சந்தேகம் எழுப்பினால் 24 மணி நேரத்தில் உரிய தகவல் வழங்கப்படும்.
“வெளியே வர வேண்டாம்”
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கை கொடுக்காது. பெங்களூரு மட்டும் அல்ல, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பொதுமுடக்கம் இல்லை. அதே சமயம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
மூத்த குடிமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகளை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும் என்றும் எடியூரப்பா கேட்டுக் கொண்டார்.
“கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா ஊரடங்கை முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பெரும் சவாலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து பிற மாநிலங்களும் கர்நாடகாவை பின்பற்றினாலும் ஆச்சர்யமில்லை என்றே தெரிகிறது.”