கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், பல தனியார் கல்லூரிகளில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகித்து கல்லா கட்டத் தொடங்கியுள்ளனர்.
இதனால் கல்லூரிகளில் மாணவர்கள் கூட்டம் அலைமோத, அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகிக்கக் கூடாது என அரசு திடீர் தடை போட்டுள்ளது. பொள்ளாச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் விண்ணப்ப விநியோகம் செய்த பிரபல தனியார் கல்லூரிக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்த சம்பவமும் நடந்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கு மருந்து இன்னும் கண்டுபிடித்த பாடில்லை. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒரே தீர்வாக சமூக இடைவெளியை பின்பற்றுவது தான் என்று கூறி நாட்டில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், மண்டபங்கள் என பலவும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகளின் பாடுதான் படு திண்டாட்டம் என்றே கூறலாம். பல்வேறு வகைகளில் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை லாபம் பார்த்த தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மீண்டும் எப்போது திறக்க அரசு அனுமதி வழங்கும் என தவம் கிடக்கின்றன. இதில் பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் வகுப்பு நடத்துவதாகக் கூறி, கட்டண வசூலில் படு ஜோராக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், +2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், கலை மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறை தரப்பில் ஒரு அறிவிப்பும் நேற்று வெளியானது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் 20-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று தான் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தில் உள்ள பிரபலமான பல்வேறு தனியார் கல்லூரிகள் இன்றே அச்சடிக்கப்பட்ட மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நேரடியாக விநியோகிக்கத் தொடங்கின. விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ 200 முதல் 1000 , 2000 என நிர்ணயித்து செமத்தியாக கல்லா கட்டவும் தொடங்கின.
தமிழக அரசு வைத்தது “ஆப்பு”
இந்த விண்ணப்ப படிவங்களை வாங்க பிரபலமான தனியார் கல்லூரிகளில் மாணவர்கள், பெற்றோர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. ஆன்லைனில் தான் விண்ணப்ப படிவம் வழங்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்புக்கு மாறாக பகிரங்கமாக நடந்த இந்த அத்துமீறல் சர்ச்சையானது.
உடனடியாக தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகம் மூலமாக இதற்கு தடை போட்டு இன்று அதிரடி உத்தரவு பறந்தது. அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை தனியார் கல்லூரி நிர்வாகங்கள் விநியோகிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவை வரும் 20-ந் தேதி முதல் தான் தொடங்க வேண்டும் என்றும் என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. விண்ணப்பத்தை வாங்க ஏராளமானோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்த நிலையில், அந்த கல்லூரிக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்த சம்பவமும் இன்று நடந்துள்ளது