--- --:--:-- --

புகார் கொடுக்கச் சென்ற சட்ட கல்லூரி மாணவர் கன்னத்தில் “பளார்” “குட்டி சாத்தா’னாக மாறிய”திருப்பூர் தெற்கு காக்கி…! தேசிய மனித உரிமை ஆணைய நடவடிக்கை பாயுமா?

etwer

சாத்தான்குளம் தந்தை -மகன் சித்ரவதை படுகொலை சம்பவத்திற்கு பிறகு போலீசாரின் அத்துமீறல், அடாவடிகள் குறித்த பல்வேறு புகார்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளன.

 

பைக் திருடு போய்விட்டது என புகார் கொடுக்கச் சென்ற திருப்பூரைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவரை போலீஸ் ஒருவர் கன்னத்தில் அறைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியதுடன் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிடுவேன் என மிரட்டலும் விடுத்து அடாவடி செய்துள்ளார். எப்படியோ சமாளித்து ஸ்டேஷனில் இருந்து தப்பி வந்த மாணவர், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லாததால், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகாரை தட்டிவிட, இப்போது ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

 

சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரும் போலீசாரின் சித்ரவதையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. மட்டுமின்றி, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் கண்டனம் வரை சென்றது. ஆரம்பத்தில், காக்கிகள் நடத்திய இந்த அராஜகத்தை மூடிமறைக்க ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் முயன்றனர். ஆனால் மக்களின் போராட்டம், கண்டனக் குரல்களால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுழற்றிய சாட்டையால் சாத்தான்குளம் போலீஸ் நடத்திய கொடூரங்கள் இப்போது அம்பலத்துக்கு வந்து, சம்பந்தப்பட்ட காக்கிகள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த இரட்டைக் கொலை வழக்கில், கொலைகார காக்கிகளும், உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

 

இந்நிலையில் தான் திருப்பூரில், தனது பைக் திருடு போய்விட்டது என புகார் செய்யச் சென்ற சட்ட கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்து அலறவிட்டதுடன், பொய்க் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன் என மிரட்டிய கொடுமையும், அராஜகமும் அரங்கேறியுள்ளது.

 

திருப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர். கோவை சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இவர் சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜுனியராகவும் பணி புரிந்து வருகிறார். கடந்த ஜுன் 14&-ந் தேதி காய்கறி வாங்க மார்க்கெட் வந்தவர் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் எதிரே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அந்தப் பகுதியில் சில போலீசாரும் பணியில் இருந்துள்ளனர்.

காய்கறி வாங்கி விட்டு 10 நிமிடத்தில் திரும்பி வந்தபோது பைக் காணாமல் போயுள்ளதைக் கண்டு பதறிய சங்கர், அருகில் இருந்த தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அங்கு இருந்த காவலர் திருப்பதி என்பவரிடம் சார், பைக் காணாமல் போய் 20 நிமிடம் தான் ஆகிறது. அவசரமாக நடவடிக்கை எடுத்தால் பைக் திருடனை கண்டுபிடித்து விடலாம் எனக் கூறியுள்ளார். ஆனால் வேறு வேலை மும்முரத்தில் இருந்த திருப்பதி என்ற அந்த காவலர் உள்ளே இருந்த மற்ற ஒரு காக்கியை கை காண்பித்துள்ளார்.

 

உள்ளே சென்ற சங்கர், அங்கு சீருடையில் இல்லாமல் இருந்த அசோக் என்பவரிடம் சென்று முன்னால் கிடந்த பெஞ்சில் அமர்ந்தது தான் தாமதம், நான் உன்னை உட்காரச் சொல்லலையே,என்று கூறி ஒருமையில் கண்டபடி எகிற, சார் நான் ஒரு வழக்கறிஞருக்கு படிக்கிற மாணவர் என்று சங்கர் பதறியுள்ளார். பதிலுக்கு மேலும் விறைப்பு காட்டிய அந்த போலீஸ்காரர், அப்ப சார்னு சொல்லணுமாடா நாயே? என்று கூறி சங்கர் கன்னத்தில் ஓங்கி அறை விட்டுள்ளார்.

 

இதில் நிலைகுலைந்த சங்கர் அலறி கீழே விழ, அவரை காலால் ஓங்கி மிதிக்க எத்தனித்துள்ளார். சங்கரின் அலறல் குரல் கேட்டு வேறு அறையில் இருந்த சில போலீஸ்காரர்கள் வர, அவர்களிடம் பிளேட்டை திருப்பி போட்டு சங்கர் அத்துமீறி நுழைந்ததாக கதை விட்டுள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவா் சங்கர்

இதனால் அந்த போலீஸ்காரர்களும் சங்கரை ஏகத்துக்கும் ஒருமையில் வகை பாட, சங்கரோ உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? என்று துடித்துள்ளார். மேலும் தம்மை தாக்கியதற்காக புகார் கொடுக்கப் போகிறேன் என்ற சங்கரிடம், உனக்கு யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க… முதல்ல நீ ஸ்டேசனை விட்டு வெளியே போக முடியாதபடி பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன் என்று ஏகவசனத்தில் மிரட்டியுள்ளார்.

 

இந்த போலீஸ் என்னவானாலும் செய்வார்கள்? என நினைத்த சங்கர் முதலில் ஸ்டேஷனை விட்டு வெளியே செல்வது உத்தமம் என்ற முடிவுடன், அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் ஓடிச் சென்று முறையிட்டுள்ளார். இன்ஸ்பெக்டரோ பைக் காணாமல் போன புகாரை மட்டும் வாங்கி விட்டு, போலீஸ் அசோக் தாக்கிய செயல் பற்றி கண்டுகொள்ளவில்லையாம்.

 

இதனால், ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த சங்கர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்து தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அது செயல்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மறுநாள் (15-&ந்தேதி) திருப்பூர் காவல் துணை ஆணையரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து நேரில் புகார் செய்துள்ளார். அவரும் இப்படி சம்பவங்கள் rare ஆக நடக்குது என்று கூறி, விசாரணை நடத்தி 10 நாளில் நடவடிக்கை எடுக்குமாறு உதவி ஆணையர் நவீன் குமாருக்கு நோட் போட்டு அனுப்பியுள்ளார்.

ஆனால் 25-ந் தேதி போலீஸ் தரப்பில் சங்கருக்கு நியாயம் கிடைத்த பாடில்லை. கன்னத்தில் அறை விட்ட போலீசை மற்ற காக்கிகள் காப்பாற்றவே பார்த்துள்ளனர்.

 

இதனால் நீதி கிடைக்காத விரக்தியால், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆன்லைனில் புகார் செய்ய சங்கர் முயற்சிக்க, அந்த வெப்சைட்டும் கோளாறாக இருந்துள்ளது. இதனால் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆன்லைனில் புகாரை தட்டி விட்டுள்ளார்.

 

இந்தப் புகாரின் பேரில் 8 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தமக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதில் கொடுத்துள்ளதாக கூறியுள்ள சங்கர், தமக்கு நீதி கிடைக்கும் எனவும், தம்மை தாக்கி மிரட்டல் விடுத்த போலீஸ் மீது உரிய நடவடிக்கை பாயும் எனவும் நம்பிக்கையுடன் உள்ளார்.

 

ஒட்டு மொத்த காவல்துறைக்கு களங்கமாக திகழும் போலீஸ் அசோக் போன்ற காக்கிகளை நீதியின் முன் நிறுத்தி சரியான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சாத்தான்குளம் சம்பவம் மட்டுமின்றி சட்ட கல்லூரி மாணவர் சங்கர் போன்றோருக்கு நிகழ்ந்தது போன்று காவல் நிலையங்களில் சில சாத்தான்களின் அத்துமீறல்கள் தொடர் கதையாகி விடும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon