இந்தியா- சீனா எல்லை பிரச்சனை ஜூன் 6 ஆம் தேதி ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை!
சீன ராணுவம் இந்தியாவிற்குள் நுழைய வில்லை என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். லடாக் பகுதியில் சீன துருப்புகள் குவிக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த ட்விட்டர் பதிவு வெளியாகியுள்ளது.
முன்னதாக சீனாவுடன் எல்லை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு தெளிவாக வெளிப்படையாக கூற வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியிருந்தார்.
இந்தியா-சீனா இடையே நிலவும் எல்லை பிரச்சனை தொடர்பாக வரும் 6ஆம் தேதி உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பங்காக் ஏரி பகுதியிலும் கல்வான் என்ற இடத்திலும் இந்தியா மேற்கொண்டு வரும் சாலை மற்றும் பால பணிகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இரு தரப்பிலும் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதால் கடந்த ஒரு மாத காலமாக பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் வரும் 6ம் தேதி இரு நாடுகளிடையேயான உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. லடாக்கில் சுகர் மொன்றோ என்ற இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.






