ரமலான் பண்டிகையை யொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் ரமலான் பெருநாளில் நாம் அனைவரும் சகோதரத்துவம், பரஸ்பர மரியாதை, இரக்கம், அன்பு, மற்றும் உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நன்னாளில், கருணை, அன்பு, மனித நேயம்,ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து உலகில் அமைதியும் சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கைத்தரம் மேலும் உயர்ந்திடவும் சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தளைத்திட வேண்டும் எனவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .
நம்மை வருத்திக் கொண்டு இருக்கின்ற கொரோனா பாதிப்பு, பொருளாதார பேரழிவிலிருந்து மீள்வதற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ரமலான் திருநாளில் சகோதரத்துவம் நிலைக்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி ஏற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
உடலையும், உள்ளத்தையும் தூய்மை படுத்த வேண்டும் என்றும் ஏழை, எளிய மக்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும் எனவும் இறைதூதர் நபிகள் நாயகம் எடுத்து உரைத்ததை நினைவில் ஏந்தி செயல்படுவோம் என இந்திய ஜனநாயக் கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்து எடுத்து மனித நேயத்தை செம்மைப்படுத்த ரமலான் பெருநாளில் உறுதி ஏற்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.