சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தொழிற்பேட்டை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் உள்ள கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் இயங்கலாம் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 சதவித தொழிலாளர்களைக் கொண்டு மட்டும் தொழிற்சாலைகள் இயங்க வேண்டும் என்றும், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட வேண்டுமெனவும் பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையை தினமும் காலை, மாலை என இரண்டு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அரசால் வெளியிடப்பட்டுள்ள நடை முறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.