--- --:--:-- --

புதிய பயணத்தின் தொடக்கம்! பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி

3

அரசியல் என்பது அதிகாரத்தை அடைவதற்கான பாதையாக மட்டும் இல்லாமல், மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது உறுதியான எண்ணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக பாமக நிறுவனர் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய பயணத்தின் தொடக்கம்! என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில், எனது வருகைக்காகவும், புதிய அரசியல் பயணத்தின் தொடக்கத்திற்காகவும் பொறுமையுடன் காத்திருந்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தக் காலகட்டத்தில் என்னை நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும், பிறர் மூலமாகவும் எனது நலனை அன்புடன் விசாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், காலம் வரும் என்பார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில், நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய அரசியல் பயணத்திற்கான நேரம் இப்போது வந்துள்ளது. சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மக்கள் நலன் ஆகிய உயரிய கொள்கைகளைத் தனது வாழ்நாள் இலட்சியங்களாகக் கொண்டு பயணித்த மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலும், அவர் நமக்குக் கற்றுத்தந்த கொள்கைகளும் என்றும் நமக்குத் துணையாக இருக்கும்.

 

இந்தப் பயணம் என்னுடைய தனிப்பட்ட பயணமல்ல. நம் அனைவருக்குமான பயணம். நம்மவர்கள் நிறைவேற்றத் தவறியதை நாம் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், சமூகப் பாதுகாப்பு ஆகியவை ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.

 

அரசியல் என்பது அதிகாரத்தை அடைவதற்கான பாதையாக மட்டும் இல்லாமல், மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது உறுதியான எண்ணம். எனக்கு நீங்கள் பாட்டாளிகள் மட்டுமல்ல; என் குடும்பத்தின் அங்கத்தினர்கள். உங்களின் அன்பும், நம்பிக்கையும், ஒற்றுமையுமே எனது பலம்.

 

கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, புதிய நம்பிக்கையுடனும் உறுதியுடனும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய ருணம் இது. இனி வரும் காலம் நம்முடைய காலம்! இந்தப் புதிய அரசியல் பயணத்தின் தொடக்கமாக, வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நாம் அனைவரும் ஒன்றுகூட இருக்கிறோம். என் அன்பு உறவுகள், பாட்டாளிகள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு, இந்தப் புதிய அரசியல் பயணத்தின் தொடக்கத்தைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள்… சந்திப்போம்… ஒன்றிணைவோம்.

 

“அனைவருக்கும் அனைத்தும்” என்ற உயரிய கொள்கையுடன், சமூகநீதியையும் மக்கள் நலனையும் முதன்மையாகக் கொண்டு ஒரு புதிய அரசியல் பயணத்தை இனிதே தொடங்குவோம். நமது ஒற்றுமை நமக்குப் பலமாகட்டும்! நமது பயணம் மக்களின் நல்வாழ்விற்கான பயணமாகட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon