அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்..!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள்… அவர்களின் கல்விப் பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தாண்டு அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு நவீன சைக்கிள்களை தயாரித்து வழங்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முந்தைய கல்வியாண்டுக்கும், நடப்பு கல்வியாண்டுக்கும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டு வரை இருந்த ரோட்ஸ்டர் (Roadster) வடிவமைப்பு மாற்றப்பட்டு, மாணவர்களுக்கு ‘ஆர்மி கிரீன்’ (Army Green) மற்றும் மாணவிகளுக்கு ‘லைலாக் மிஸ்ட்’ (Lilac Mist) என நவீன வண்ணங்களில் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சைக்கிளின் கீழ் குழாய் (Down tube) தடிமன் மாணவர்களுக்கு 44.0 மி.மீ ஆகவும், மாணவிகளுக்கு 38.0 மி.மீ ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உறுதியான இணைப்புகளுக்காக MIG, TIG வெல்டிங் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற சாலைகளிலும் எளிதாகப் பயணிக்கும் வகையில் அகலமான டயர்கள்… முன்புறம், பின்புறம் காலிபர் பிரேக்குகள்… நீண்ட தூரப் பயணத்துக்கு ஏற்ற குஷன் இருக்கை என வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. துருப்பிடிக்காத PPCP பிளாஸ்டிக் மட்கார்டுகள், செயின் கவர், பிரேமுடன் இணைக்கப்பட்ட கேரியர் என உதிரி பாகங்களிலும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் கூடுதல் சிறப்பு… சைக்கிள் நிறத்துக்கு ஏற்ற ஹெல்மெட், தண்ணீர் பாட்டில் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. ஹெல்மெட்டுக்கு IS தரச்சான்றும் பெறப்பட்டுள்ளது. சைக்கிளைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஸ்டீல் கேபிள் லாக்… அரசு இலச்சினை லேசர் மூலம் பொறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3 ஆண்டுகளாக இருந்த உத்தரவாத காலம், தற்போது 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு, NABL ஆய்வக சான்றும் பெறப்பட்டுள்ளது.
இத்தனை அதிநவீன வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும், சைக்கிளின் விலையில் அடிப்படை விலை குறைந்துள்ளது. அடிப்படை விலை ஒப்பீட்டைப் பார்க்கையில், 2025-26ஆம் ஆண்டில் மாணவர் சைக்கிள் 4,375 ரூபாயும், மாணவியர் சைக்கிள் 4,250 ரூபாயுமாக இருந்தது. ஆனால் 2026-27ஆம் ஆண்டில் மாணவர் சைக்கிள் 4,369 ரூபாயாகவும் மாணவியர் சைக்கிள் 4,245.30 ரூபாயாகவும் உள்ளது.
அதாவது, மாணவர்களுக்கான சைக்கிளில் 6 ரூபாயும், மாணவிகளுக்கான சைக்கிளில் 4 ரூபாய் 70 காசுகளும் அடிப்படை விலையில் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 12% GST-உடன் இருந்த வரி விகிதம், நடப்பு ஆண்டில் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் அடங்கிய முழுத் தொகுப்பின் இறுதி விலை GST உட்பட மாணவர்களுக்கு 5,260 ரூபாயாகவும், மாணவிகளுக்கு 5,130 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 சைக்கிள் தொகுப்புகளுக்கான தொடக்க ஏல மதிப்பு 392 கோடியே 32 லட்சம் ரூபாயாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதி செய்யப்பட்ட கொள்முதல் மதிப்பு 276 கோடியே 20 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 116 கோடியே 12 லட்சம் ரூபாய் அளவுக்கு கொள்முதல் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கப்பட்ட 277 கோடி ரூபாய் நிதி வரம்புக்குள்ளும் கொள்முதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




