ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ இயங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம்!

ஆட்டோ இயங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்ற போராட்டத்தின்போது ஓட்டுநர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

சில தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் ஆட்டோ ஓட்டுநர்களை பாதுகாக்கும் முறையில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு. ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்படாததால் கடந்த இரண்டு மாதங்களாக வருமானமின்றி அவர்களது குடும்பம் தவித்து வருகிறது.

 

மருத்துவ உதவி அத்தியாவசிய உதவிகளை இயக்கப்படும் ஒரு சில ஆட்டோக்களுக்கும் காவல்துறையினரின் கெடுபிடிகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில்தான் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆங்காங்கே ஆட்டோ ஓட்டுனர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

இதேபோல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ கடன் தொகையை வசூலிக்க 6 மாத விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளித்ததோடு பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


Leave a Reply