ஊரடங்கு வறுமையை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊரடங்கு கொடூரம் முடிவுக்கு வருமா? ஊரடங்கு வேளையிலே அந்த குடும்பத் தலைவர் ஆறுமுகத்திற்கு வறுமையை சமாளிக்க வழி தெரியவில்லை.
பாசத்தோடு வளர்த்த மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். இந்த சோக சம்பவம் வெளியில் தெரிய வந்தது எப்படி? காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள். 42 வயதான ஆறுமுகம் 30 வயதான கோவிந்தம்மாள் தம்பதி இந்த தம்பதிக்கு 12 வயதில் ராஜேஸ்வரி, பத்து வயதில் ஷாலினி என்கிற இரண்டு மகள்களும் எட்டு வயதில் சேதுராமன் என்ற மகனும் இருந்தனர்.
கூலித் தொழிலாளியான ஆறுமுகம் அப்பகுதியில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சிறிது காலம் வேலை பார்த்தார். அதே பகுதியில் உள்ள சிறிய அம்மன் கோவில் ஒன்றில் சாமி ஆடி குறி சொல்பவர் ஆகவும் இருந்தார். இந்த நிலையில் கோவிந்தனின் மனைவிக்கு செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை கிடைக்கவே அவர் முதல் நாளான திங்கள்கிழமை காலையில் சென்று விட்டார்.
வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய போது மூத்த மகள் ராஜேஸ்வரி வீட்டில் இறந்து கிடந்ததை பார்த்து அலறி உள்ளார். பின்னர் ஊரார் உதவியுடன் மற்றும் இரு குழந்தைகளையும் கணவரையும் தேடியபோது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் அருகிலுள்ள மரத்தில் ஆறுமுகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டனர். பின்னர் குழந்தைகளின் ஆடைகள் கிணற்றில் இருந்ததால் கிணற்றுக்குள் குழந்தைகள் விழுந்து இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் தீயணைப்புத் துறையினரை வரவழைத்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது ஷாலினியும் சேதுராமன் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
அவர்களின் கை, கால்களை கட்டி ஆறுமுகம் கிணற்றில் தள்ளி விட்டது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் முன்பே ஆறுமுகத்திற்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு உள்ளார். செல்போன் நிறுவனத்தில் கிடைத்து வந்த வேலையும் பறிபோனது. கோவிலுக்குள் யாரும் வராததால் அங்கு கிடைக்கும் சிறிய வருமானமும் அவருக்கு இல்லாமல் போனது.
இந்த நிலையில்தான் ஆறுமுகத்தின் மனைவிக்கு மீண்டும் செல்போன் நிறுவனத்தில் வேலை கிடைத்து உள்ளது. எனினும் குடும்ப வறுமையை சமாளிக்க முடியாமல் ஆறுமுகம் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என்கின்றனர் போலீசார்.