கீழடியில் ஆறாம் கட்ட அகலாய்வுப் பணி ஆய்வு பணி மீண்டும் துவங்கியது!
கீழடியில் ஆறாம் கட்ட அகலாய்வுப் பணி ஆய்வு பணி மீண்டும் துவங்கியது. முக கவசம் அணிந்து குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அடுத்த சில நாட்களில் முழு வீச்சில் தொடரும் என்று தமிழக தொல்லியல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்டாயப் பணிகள் இந்திய அரசின் தொல்லியல் துறை சார்பாக அங்கு நடைபெற்றன. நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட பணிகள் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார். ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடியுடன் கொந்தகை அகரம் மணலூர் ஆகிய பகுதிகள் கூடுதலாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே கொரானா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக தமிழக தொல்லியல் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு பிறகு கீழடி அகழாய்வு பணிகள் இன்று கீழடி மற்றும் அகரம் பகுதியில் குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு முககவசமிட்டு சமூக இடைவெளி விட்டு பணிகள் துவங்கியது. இன்னும் ஒரு சில நாட்களில் மணலூர் மற்றும் கொந்தகை பகுதியில் முழுவீச்சில் தொடங்கும் என்று தமிழக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






