மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு என்ற முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும்,குறுவை தொகுப்பு திட்டத்தையும் வழங்கவும் முதலமைச்சருக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தமிழ்நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜீன் 6ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சுமார் 8 ஆண்டுகள் தொடர்ந்து குறுவை சாகுபடியை முற்றிலும் இழந்து விட்டோம். ஒரு போக சம்பா சாகுபடியும் ஓரிரண்டு ஆண்டுகள் தவிர்த்து பல ஆண்டுகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம்.
இதனால் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.இந்நிலையில் நடப்பாண்டு ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க முதலமைச்சர் அறிவிப்பு செய்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.குறுவை சாகுபடி பணி துவங்கி செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அறுவடை பணிகள் முடித்து வாய்ப்பிருக்குமேயானால் தாளடி சாகுபடி பணியும் மேற்கொள்ள வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,சுமார் 10 லட்சம் ஏக்கரில் ஒரு போக சம்பா சாகுபடி பணிகளும் மேற்கொள்ளும் வகையில் ஜூன் 12 முதல் அக்டோபர் 20ல் வடகிழக்கு பருவ மழை துவங்கும் வரையில் தேவையான தண்ணீரை தடையின்றி வழங்க வேண்டும் எனவும்,காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி மாதந்திர அடிப்படையில் கர்நாடகம் நமக்கு தரவேண்டிய தண்ணீரை பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,போர்க்கால அடிப்படையில் தூர் வாரும் பணிகள் விரைவில் துவங்கி முடிக்க அரசு செயலர் அந்தஸ்தில் தனி அதிகாரி நியமனம் செய்து ஊழல் முறைகேடின்றி நடை பெற பொறுப்பளித்திட வேண்டும். வேளாண் பணிகளை துரிதப்படுத்திட வேளாண் துறை,பொதுப்பணித்துறை, கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளர்கள் தலைமையில் உயர் மட்ட குழு காவிரி டெல்டாவிற்கு அனுப்பி வைத்து துரிதப்படுத்த வேண்டும்.விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுபாடின்றி கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும்.
மேலும்,கூட்டுறவு வங்கி கடன் நிலுவையை தள்ளுபடி செய்திட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசு கொரோனாவை முன்னிட்டு நபார்டு வங்கி மூலம் ரூ 30000ம் கோடி கூடுதல் தொகை கடன் வழங்க அனுமதித்துள்ளதை பயன்படுத்தி நிலுவை கடன் தொகையை ஒத்தி வைத்து புதிய கடன் வழங்க முன்வர வேண்டுமென வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் நாள் 1க்கு 12 மணி நேரம் தடையின்றி வழங்குவதற்கு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இலவச மின்சாரத்தை அடியோடு ரத்து செய்யும் உள்நோக்கத்தோடு புதிய 2020மின்சார சீர்திருத்த வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். அதனை முழுமையாக கைவிட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்திட வேண்டுகிறேன் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.