தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடுகள் வழங்கும் புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசின் பங்களிப்புடன் தனியாருடன் இணைந்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார்.
குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள் அமைப்புகளுக்கு மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வீட்டுக் கடன் மானியத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கூறிய அவர் வீட்டுக் கடனுக்கு மானியம் வழங்கவும், வீட்டுவசதி துறையை மேம்படுத்தவும் 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
வீட்டுக்கடன் மானியத் திட்டத்தின் மூலம் 3.3 லட்சம் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வீட்டுக் கடன் மானிய திட்டத்தால் இரும்பு, சிமெண்ட் ,போக்குவரத்து துறையில் தேவைகள் அதிகரித்து வேலைவாய்ப்பு உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.