மேட்டுப்பாளையம் கல்லாறு அரசு பழப்பண்ணையில் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளதால் மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. மா, பலா, எலுமிச்சை, துரியன், லிட்சி, மங்குஸ்தான், மலையன் ஆப்பிள், ரம்பூட்டான், வாட்டர் ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழ வகைகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்பண்ணையில் தற்போது வாட்டர் ஆப்பிள் பழத்தின் சீசன் துவங்கியுள்ளது. பழப்பண்ணையில் 20க்கும் மேற்பட்ட வாட்டர் ஆப்பிள் பழத்தின் மரங்கள் உள்ள நிலையில் தற்போது அந்த மரங்கள் முழுவதும் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.
எப்போதும் குளுமையான பருவ நிலையில் உள்ள கல்லாறில் மட்டுமே இந்த பழங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் நீர் சத்து அதிகமாக இந்த பழத்தில் உள்ளதால் இதற்கென தனி சுவையும் உண்டு.இதை வாட்டர் ஆப்பிள் என்று ஆங்கிலத்தில் கூறுவர். கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரம் மற்றும் மலையடிவார பகுதிகளில் மட்டுமே இந்த மரம் நன்கு வளரும்.
இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இதனை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீர்ச்சத்து நிறைந்து இருப்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். இதனால் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் பழத்தை விரும்பி சாப்பிட பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.