--- --:--:-- --

20 அடி ஆழ குழியில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு! காரணம் அரசா?

12.1

திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் 20 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். மீண்டும் ஒரு சுர்ஜித் சம்பவம் நடக்க யார் காரணம்? கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சோக சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.

 

7 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் நான்கு வயது சிறுவன் சித்தார்த் அரசுத் துறையின் அலட்சியத்திற்கு பலியாகியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டல நாயன குண்ட அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் 28 வயதான சங்கர், 23 வயதான வெண்ணிலா தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்.

 

அவர்களில் மூத்த மகன்தான் 4 வயதான சித்தார்த் . புதன்கிழமை மாலை தனது நண்பர்களுடன் சித்தார்த் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் மற்ற குழந்தைகள் வீட்டிற்கு சென்ற நிலையில் சித்தார்த்தை மட்டும் காணவில்லை. அப்போது சித்தார்த் ஒரு குழியில் விழுந்து விட்டதாக உடன் விளையாடும் ஒரு சிறுவன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் சென்று பார்த்தபோது 20 அடி ஆழ குழியில் நீர் நிரம்பி காணப் பட்டது. சித்தார்த்தை காணவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் குழிக்குள் இறங்கி சிறுவனை தேடத் துவங்கினார். சமீபத்தில் பெய்த மழையால் குழி முழுவதும் அதிகமாக தண்ணீர் இருந்ததால் சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மூன்று மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்தன. வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை அதிகரிக்க பெரிய ஏரிகளுக்கு செல்லும் கால்வாயில் 20 அடி ஆழத்திற்கு முறைகிணறு அமைக்க குழி தோண்ட அரசு உத்தரவிட்டுள்ளது. குழி தோண்டப்பட்டு அதில் முறை கிணற்றுக்கான சிமெண்ட் வளையங்கள் பொருத்தப்பட்டு மூடியும் பொருத்தப்பட வேண்டும்.

 

சிறுவன் சித்தார்த் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் ஒரு கால்வாய் செல்கிறது. அந்த கால்வாயில் மண்டல நகராட்சி சார்பில் 90 ஆயிரம் ரூபாய் செலவில் முறை கிணறு அமைக்க 2018 ஆம் ஆண்டு 20 அடி குழி தோண்டப்பட்டது. ஆனால் இன்றுவரை கிணறுக்கான சிமெண்ட் வளையங்கள் வைக்கப்படவில்லை. மூடியும் பொருத்தப்படவில்லை.

 

அந்தக் குழியில் விழுந்து தான் சிறுவன் சித்தார்த் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊராட்சி செயலாளர் ஸ்ரீதர், ஒப்பந்ததாரர், பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய 4 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரி சித்தார்த்தின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதுவரையிலும் சிறுவனின் உடலை உடற்கூறாய்வு தரப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். பொதுமக்களின் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஊராட்சி செயலாளர் சேகர் மற்றும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon