ஸ்வீடனில் கொரொனா பரவலை தடுக்க கட்டுபாடு இல்லை! அங்கு நடப்பது என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை விதிக்காத தங்கள் அணுகுமுறைக்கு வெற்றி கிடைத்திருப்பதாக ஸ்வீடன் அரசு தெரிவிக்கும் நிலையில் அங்கு தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் வேறுவிதமான நிலையில் காட்டுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் கொரொனா பரவலைத் தடுக்க அரசு சார்பில் சில எச்சரிக்கைகள் மட்டுமே மக்களுக்கு விடுக்கப்பட்டன.

 

50 பேருக்கு மேல் கூட கூடாது, வீட்டிலிருந்து பணிபுரிய வாய்ப்புள்ளவர்கள் அதை செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. கல்லூரி வகுப்புகள் இணையதளம் வழியாக நடைபெறலாம் என கூறப்பட்டது. ஆனால் பள்ளி குழந்தைகள் தங்கள் வகுப்புக்கு சென்று வருகின்றனர். அலுவலகங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டு ஊழியர்கள் நடமாட்டம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .

 

சலூன்கள், உணவகங்கள் வழக்கம்போல திறந்திருக்கின்றன. எனினும் சுமார் ஒரு கோடியே மூன்று லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்வீடனில் கொரொனா இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 21 ஆக இருக்கிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஸ்பெய்னில் இலட்சம் பேருக்கு இறப்பு விகிதம் 44 ஆகவும், இத்தாலியில் 49 ஆகவும் உள்ள நிலையில் அங்கெல்லாம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாகவும் ஆனால் தங்கள் நாட்டின் அணுகுமுறை சரியானது என்றும் ஸ்வீடன் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் அத்தகையப் போக்கால் கொரொனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். டென்மார்க்கில் இறப்பு விகிதம் லட்சம் பேருக்கு 7 ஆகவும், நார்வே, பின்லாந்தில் தலா நான்காகவும் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

எனவே மேலும் நிலைமை மோசமாவதை தவிர்க்க முழு முடக்கத்தை அரசு செயல்படுத்த வேண்டும் தனிமனித இடைவெளியை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஸ்வீடனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2,200 பேர் உயிரிழந்துள்ளனர்.


Leave a Reply