அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் அடுத்த ஆண்டு ஜூன் இறுதி வரை தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் தற்போது அளிக்கப்பட்டு வரும் விகிதத்தில் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் ஸ்தம்பித்து இருக்கும் நிலையில் இம் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கும் அடுத்தாண்டு ஜூன் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஈட்டிய விடுப்பு ஊதியத்திற்கு விண்ணப்பித்து இருந்தால் அதுவும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

 

இது தவிர அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.9 விழுக்காட்டிலிருந்து 7.1 ஆக குறைக்க படுவதாகவும், மூன்று மாதங்களுக்கு இந்த வட்டி குறைப்பு அமலில் இருக்குமென்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக அரசின் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தியுள்ளது. அரசின் உத்தரவுக்கு ஏற்ப கொரொனா தடுப்பு பணியில் அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவுகள் பேரதிர்ச்சி தருவதாக ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.


Leave a Reply