உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி கோரிக்கை

மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக மத்திய அரசு ரூ.1000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பிரதமர் மோடி, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன்பிரதேச முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

 

இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக மத்திய அரசு ரூ.1000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

 

சிறு, குறு தொழில்களுக்கு ஆறு மாதம் விலக்கு அளிக்க வேண்டும். உணவு தானியங்களை வழங்க ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும். பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும்.

உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் 50 சதவிகிதத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைவு. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானவர்கள் விகிதம் 54% என அதிக அளவில் உள்ளது.

 

நாள் ஒன்றுக்கு 10,000 கொரோனா சோதனைகளை நடத்த பிசிஆர் பரிசோதனை கருவிகளை அதிகளவில் வழங்க வேண்டும். தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

 

பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை முதலமைச்சர் பொது நிவாரணத்தில் பெற அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தின் தொழிலாளர்களுக்கு ஊராட்சி செயலர்கள் மூலம் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக்கு மத்திய அரசு போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும். டிசம்பர், ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

 


Leave a Reply