பேஸ்புக்கில் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்த ரோமியோ!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பெண் மருத்துவரை காதலிப்பது போல நடித்து அவரது புகைப்படம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞருக்கு சமூக வலைதளம் மூலமாக சென்னை பெண் மருத்துவர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவரை காதல் வலையில் வீழ்த்திய காசி திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் காசி தனது மாமாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி மருத்துவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். மேலும், அப்பெண்ணின் வங்கி கணக்கை தனது செல்போன் எண்ணுடன் இணைத்து அதன் மூலமும் பணம் எடுத்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் பெண் மருத்துவர் பணத்தை திருப்பி கேட்ட போது அவரின் புகைப்படம், வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு மிரட்டியுள்ளார்.

 

இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்து பெண் மருத்துவர் காவலர்களிடம் புகார் அளித்தார். அதன் பேரில் காசியை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் பல பெண்களுடன் காசிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

 

சமூக வலைதளங்களில் தொழிலதிபர் என்ற பெயரில் பல கணக்குகளை தொடங்கி அதன் மூலம் சென்னை, நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த மேலும் பல பெண்களை ஏமாற்றி வந்ததையும் காவலர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காசியை கைதுசெய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply