தம்பதி இடையே நடந்த சண்டையில் தனது ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட தந்தை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


விருதுநகர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே தம்பதியிடையே தகராறு நடந்து வந்த நிலையில் ஒரு வயது குழந்தையையும் கொன்று தானும் துயர முடிவுக்கு சென்றுள்ளார் மாரி கண்ணன் வாழ்வை முடித்துக் கொள்ளும் அளவிற்கு என்ன நேர்ந்தது?

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 29 வயதான மாரி கண்ணன். தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சங்கரேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி ஒரு வயதில் மௌனி கணேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. திருமணம் ஆன நாள் தொட்டு தம்பதி இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

வேலை முடித்து மதுபோதையில் வீட்டிற்கு வரும் கண்ணன் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் உறங்க சென்று விட்டனர். விரக்தியடைந்த மாரி கண்ணன் நள்ளிரவில் எழுந்து தூங்கி கொண்டிருந்த ஒரு வயது குழந்தையின் வாயில் விஷத்தை ஊற்றிக் கொன்றுள்ளார்.

 

பின்னர் தானும் விஷம் அருந்தியுள்ளார். அதனால் மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து சத்தம் கேட்டு எழுந்து பார்த்த சங்கரேஸ்வரி கணவன் மற்றும் குழந்தையின் நிலையை பார்த்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சாத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை மௌனி கணேஷ் உயிரிழந்தார்.

 

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மாரி கண்ணனும் உயிரிழக்க போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் குழந்தை மற்றும் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட மாரி கண்ணனால் அந்த கிராமம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Leave a Reply