கோவை மக்களுக்கு ஒரு நற்செய்தி! கோவையில் இதுவரை 53 பேர் ” டிஸ்சார்ஜ் ” !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா எனும் கொடிய அரக்கன் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்ததோடு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவில் இதுவரை 13,295 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.519 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.2301 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் நேற்றைய தினம் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 105 ஆக எகிறியுள்ளது. சென்னையில் மட்டும் 50 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அன்றாட கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத் துறை சார்பில் தினமும் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டு வந்தது.நேற்றைய தினம் சென்னையில் செய்தியாளர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இனிமேல் செய்தியாளர் சந்திப்பு கிடையாது எனவும், அறிக்கை மூலம் தகவல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் நேற்றைய மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

 

கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 21,381 பேர் உள்ளனர். அரசுக்கண்காணிப்பில் 20 பேர் உள்ளனர் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியாக சென்னையில் அதிகபட்சமாக நேற்றெ ஒரே நாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சாவூரில் 10 பேருக்கும்,கோவையில் 5, திண்டுக்கல்லில் 5 , நெல்லையில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் பாதிக்கப்பட்ட 50 பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 3 மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பத்திரிகையாளர்கள், 2 காவல்துறையினர், 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் கோவை மக்களுக்கு ஒரு நற்செய்தியாக நேற்றைய ஒரே நாளில் மட்டும் 24 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் மட்டும் இதுவரை 53 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

கோவையை பொறுத்த வரை கடந்த சில நாட் களாக கொரோனா பாதிப்பு மிக மிக குறைவாகவே இருந்து வருகிறது.” சிவப்பு மண்டலமாக ” அறிவிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் கோவை மாநகரம்,புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், அன்னூர்,சூலூர்,பொள்ளாச்சி, ஆனைமலை,வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தும்,கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் அணிவது,கைகளை சுத்தப்படுத்துவது,சமூக விலகலை கடைபிடிப்பது போன்றவற்றை முறையாக பின்பற்ற செய்வது என பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதே முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

இதனால் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்த்து வருகின்றனர்.மேலும்,சமூக விலகலை முறையாக பின்பற்றி வருகின்றனர்.மாவட்ட நிர்வாகத்தின் தக்க நடவடிக்கையால் தற்போது கோவையில் கொரோனா பாதிப்பு வெகுவாகவே குறைந்து வருகிறது.இதனாலேயே கோவையில் நேற்று மட்டும் 24 பேரும்,இதுவரை 53 பேரும் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.

 

கோவையில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே வெகுவாக குறைந்து காணப்படும் நிலையில் இதுவரை 53 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply